இந்த வலைப்பதிவில் தேடு

தனியார் பள்ளி வாகனங்களில் GPS, CCTV கேமரா கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

 



பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுளளது.


இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி வாகனங்களில் நடத்துநர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. எனவே, பள்ளி வாகனங்களில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


அதன்படி, தமிழ்நாடு மோட்டார்வாகனங்கள் சிறப்பு விதிகள்-2012-ல் பிரிவு 5(6)-ன் படி மாணவிகளுக்காக இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகனஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் மற்றும் உதவியாளர் நியமனத்தின்போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை இல்லை என்பதற்கான காவல் துறையின் சான்று மற்றும் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


இதுதவிர, உதவியாளருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு போக்சோ சட்டத்தின் சாராம்சங்களை தெளிவாக விளக்க வேண்டும். வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வாகனத்துக்கும் தரச்சான்று உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் மாவட்டஅளவிலான ஆய்வுக் குழுவின் சோதனைக்கு வாகனங்களை உட்படுத்த வேண்டும். வாகனங்களின் முன்னும், பின்னும் பள்ளி வாகனம் என எழுதியிருப்பதுடன், மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, பள்ளியின் தொலைபேசி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.


அதேபோல், பள்ளி வாகனத்தில் முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, முன் மற்றும் பின் சக்கரங்களின் இடையே பாதுகாப்பு தாள்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் அவசரகால வழி இருப்பதுடன், அசாதாரண சூழல்களில் மாணவர்கள் உடனே தொடர்பு கொள்ள அவசரகால பட்டன்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். காலாவதியானவாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மேலும், வாகனங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக மாணவர்களை ஏற்றக்கூடாது.


முக்கியமாக, குழந்தைகளை இறக்கிவிடும்போது வாகனத்துக்கு அருகில் அல்லது பின்புறமாக எவரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும். பள்ளியை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றி, இறக்கக்கூடாது என்பன உட்பட 32 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பின்பற்றி செயல்பட அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கும் அந்தந்த மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent