இந்த வலைப்பதிவில் தேடு

இன்றைய சிந்தனை - பல்லாயிரம் பழக்கங்கள் (01/06/2024)

சனி, 1 ஜூன், 2024

 




01/06/2024.


*பல்லாயிரம் பழக்கங்கள்.*


ஒரு செயலை பழக்கமாக்கிக் கொள்வது எளிதானது இல்லை. எது சரி? எது தவறு? என அறியாமலே சில பழக்கங்களை நாம் கைக்கொண்டு வருகிறோம். “என்ன செய்யறது பழக்கமாயிருச்சு” எனச் சொல்லியவாறு, பல பேர் தவறான செயல்களைச் செய்வதைப் பார்க்கிறோம். எது நல்ல பழக்கம்? எது கெட்ட பழக்கம் என்பதற்கு அளவுகோல் என்ன?


‘பழக்கங்களை மாற்றிக் கொள்வதோ, அதைக் கைவிடுவதோ முடியாத செயல்’ எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. எந்தப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ளவும், கைவிடவும் நிச்சயம் முடியும். அதற்கு நாம் தீவிரமாக முனைந்து செயல்பட வேண்டும். உறுதியான மனதுடன் இருக்க வேண்டும்.


ஜாகிங் போகப் போகிறேன் எனப் புது ஷூ வாங்கி வைத்துவிட்டு, இரண்டு நாட்கள் கூட கடைபிடிக்க முடியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். பதற்றத்தில் நகம் கடிப்பது; பேன்ட் பாக்கெட்டில் பணத்தை வைத்துவிட்டு அப்படியே அழுக்குக் கூடையில் போட்டுவிடுவது; சாவியை ஆணியில் மாட்டாமல் தூக்கி எறிவது; சாப்பிடும்போது போன் பேசுவது; நிறைய நொறுக்குத் தீனி தின்பது; குளிர்பானம் குடிப்பது; எப்போதும் படுக்கையில் கிடப்பது என எளிய பழக்கங்கள் தொடங்கி, போதை மருந்து உட்கொள்வது, கஞ்சா புகைப்பது, மது குடிப்பது, போதையில் தவறாக நடந்து கொள்வது என மோசமான பழக்கங்கள் வரை பல்லாயிரம் விதங்கள் மனிதர்களைப் பீடித்துள்ளன.


இதன் காரணமாகவே வீடுதோறும் சண்டை நடக்கிறது. ஆணும், பெண்ணும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். ஆனால், பழக்கத்தை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதே இல்லை.


‘ஒருமுறை தோன்றி விட்டால் பழக்கத்தை மாற்றவே முடியாது ’ என்பதும் உண்மையில்லை. பழக்கம் உருவாவதற்கு ஏதாவது ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது. பழக்கத்தைத் தொடர்வதற்கு அதன் வழியே கிடைக்கும் வெகுமதி காரணமாகயிருக்கிறது. இந்த வெகுமதி என்பது புத்துணர்வாகவோ, சந்தோஷமாகவோ, திருப்தியாகவோ, வெறுமையாகவோ, தனியாக உணர்தலாகவோ, ஏக்கமாகவோ, ஏன் அகந்தையாகவோ கூட இருக்கக்கூடும்.


பெரும்பான்மையினரின் தோல்விக்கு அவர்களின் சில பழக்கங்களே காரணமாக உள்ளன என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். அது உண்மை. பழக்கம் என்பது எளிமையான விஷயமில்லை. அது மனிதர்களை ஆட்டிப் படைக்கக் கூடியது. பழக்கம் நரம்பு மண்டலத்தில் ஏக்கத்தை உருவாக்கக் கூடியது. ஆரம்பத்தில் அதன் தாக்கத்தைப் பலரும் உணர்வதே இல்லை. ஆனால், நாளடைவில் அந்த ஏக்கம் பழக்கத்தை தீவிரமானதாக்கி 

விடுகிறது.


கேரளாவில் ஒரு திருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு பிடிப்பட்டான். ஆள் இல்லாத வீடுகளிகளில் பூட்டை உடைத்து திருடப்போகிற அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது. அது திருடப்போகிற வீட்டில் சமைத்து சாப்பிடுவது.

அவனுக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு விட்டுதான் அவன் அங்கிருந்து வெளியேறிப்போவான். இந்த ஒரு துப்பை கொண்டு அவனை எளிதாக மடக்கி பிடித்துவிட்டார்கள். திருடப்போகிற இடத்தில் சமைத்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கம் எப்படி அவனுக்கு உருவானதோ, தெரியாது. ஆனால், அந்தப் பழக்கம்தான் அவனைக் கைதுசெய்ய உதவியது.


கைவிட வேண்டிய பழக்கங்களை ஒரு நாளில் நிறுத்தி விடமுடியாது. ஆனால், நிறுத்திவிட வேண்டும் என்ற முனைப்பும் தொடர்ந்த செயல்பாடும் இருந்தால் நிச்சயம் நிறுத்திவிடலாம்.


பல பேர் என்னிடம் ‘தனக்குப் புத்தகம் படிக்கிற பழக்கமே இல்லை. அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது’ எனக் கேட்டிருக்கிறார்கள்.


‘புத்தக வாசிப்பு எப்போதும் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்.


கல்வி நிலையங்களில் தொடரப்பட வேண்டும்.


பொதுவெளியில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்!’


குறிப்பாகப் பள்ளி செல்லும் வயதிலே குழந்தைகளுக்குச் சிறிய படக் கதைகளை வாசிக்கப் பழக்க வேண்டும். பின்பு, படமும் எழுத்தும் கொண்ட புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.


10 வயதில் சிறிய நூல்களை வாசிக்கப் பயிற்சித் தர வேண்டும். 18 வயதுக்குள் பெரிய நூல்களை வாசிக்கப் பழகி விட வேண்டும். பின்பு, தேர்வு செய்து நூல்களை வாசிக்கவும், குறிப்பெடுத்துக் கொள்ளவும், வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், விவாதிக்கவும் வேண்டும். இந்தப் பழக்கதை உருவாக்கிக் கொண்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் உங்களின் ஆளுமை வளர்ந்து கொண்டேயிருக்கும். 


வாழ்வின் துன்பங்களை எளிதாகச் சந்திக்கவும், கடந்து செல்லவும், வெற்றிகொள்ளவும் பழகிவிடுவீர்கள்.


புத்தகம் மட்டுமின்றி, கிண்டில் அல்லது இணையத்தில் இ-புத்தகம், கட்டுரைகள், கதைகள் போன்றவற்றை வாசிப்பதும்கூட வாசிக்கும் பழக்கத்தில் சேர்ந்ததுதான். இளைய தலைமுறை அதையாவது கைக்கொள்ளலாமே!


படிக்கவோ, நடக்கவோ, பாடவோ ஆரம்பிக்கும்போது மிக எளிமையாக 5 அல்லது 10 நிமிஷம் எனத் தொடங்குங்கள். அடுத்த சில நாட்களில் 15 நிமிடம், பின்பு 20, 30 என அதிகப்படுத்துங்கள். இதுவே நீங்கள் நினைத்ததை அடைய சுலபமான வழி. 90 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டால் எதுவும் பழக்கமாக உருமாறிவிடும்.


நெடும் காலத்துக்கு முன்பாக, காசியில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான். கையேந்தி காசு கேட்பதே அவனது வாழ்க்கை. ஒரு நாள் காசிக்கு ஞானி ஒருவர் வந்திருந்தார். அவரிடம் ‘‘தன் வாழ்க்கையை மாற்ற ஏதாவது உபதேசம் செய்யுங்கள்’’ எனக் கேட்டான்.


அதற்கு அந்த ஞானி, ‘‘நாளை முதல் நீ எவரை சந்தித்தாலும் காசு கொடுங்கள் எனக் கேட்பதற்குப் பதிலாக, நன்றாக இருங்கள் என வாழ்த்த வேண்டும். இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டால் உன் வாழ்க்கை மாறிவிடும்’’ என்றார். பிச்சைக்காரனுக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும், ஞானியின் வாக்கை கடைபிடித்துப் பார்ப்போமே என முடிவுசெய்து, மறுநாள் முதல் சாலையில் எதிர்படும் மனிதர்களைப் பார்த்து ‘‘நன்றாக இருங்கள்...’’ என மனதார வாழ்த்தினான்.


ஆரம்பத்தில் அந்த வாழ்த்தொலிக்கு பயன் கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் அவனது செயலை மக்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். சுபகாரியம் செய்யபோகிறவர்கள் அவன் முன்னால் போய் ஆசி வாங்கினார்கள். காணிக்கை கொடுத்தார்கள். சில மாதங்களில் அவனது ஆசிர்வாதப் புகழ் பரவியது. வெவ்வேறு ஊர்களில் இருந்து ஆட்கள் அவனைத் தேடி வந்து வாழ்த்துப் பெறத் தொடங்கினார்கள். அவனுக்கான உணவும், உடையும், இருப்பிடமும் அவர்களே அமைத்துக் கொடுத்தார்கள்.


இரண்டே இரண்டு நல்ல வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு, அதைத் தொடர்ந்து சொல்லிவந்தால்... வாழ்க்கையில் எவ்வளவு மேம்பாடு ஏற்படுகிறது என்பதைப் பிச்சைக்காரன் உணர்ந்து கொண்டான். ஒரு நல்ல பழக்கம் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதற்கு அந்தப் பிச்சைக்காரனே சாட்சி!


ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவும், உறவுகளைச் சீரமைத்துக் கொள்வதற்கும், குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும், தனிநபரின் மேம்பாட்டுக்கும் நல்ல பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டியது அவசியம். அவற்றை முனைந்துதான் செயல்படுத்த வேண்டும். அதற்கு உங்கள் பழக்கங்களைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதில் எதைக் கைவிட வேண்டும்? ஏன் கைவிட வேண்டும் எனப் பரிசீலனை செய்யுங்கள். பின்பு உங்கள் முடிவை நடைமுறைப் படுத்துங்கள். 


நிச்சயம் வெற்றி காண்பீர்கள்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent