பள்ளிக்கு இரட்டை ஜடை போடாமல் வந்த மூன்று மாணவிகளின் முடியை வெட்டிய இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகம் மாநிலம், சென்னப்பட்டணா தாலுகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ராமநகர மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகாவில் அரலூலு சந்திரா கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினமும் இரட்டை ஜடை போட்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் படிக்கும் மூன்று மாணவிகள் இரட்டை ஜடை போடாமல் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் பவித்ரா, சிவக்குமார் ஆகியோர் அந்த மூன்று மாணவிகளின் முடியை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அவமானமடைந்த பள்ளி மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோர்களிடம் கூறியதை தொடர்ந்து, பள்ளிக்குச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், பெண் குழந்தைகளின் முடியை எப்படி வெட்டலாம் என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தினமும் பள்ளிக்கு இரட்டை ஜடை போட்டு வராததால் முடியை வெட்டியதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், மாவட்டக் கல்வி அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து சென்னப்பட்டணா தாலுகா கல்வி அலுவலர் மரி கவுடா, புகாருக்கு உள்ளான பள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பவித்ரா, சிவக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அவர், ராமநகர மாவட்ட டிடிபிஐ பசவராஜே கவுடாவிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின் பேரில், சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னப்பட்டணா தாலுகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக