இந்த வலைப்பதிவில் தேடு

நல்லாசிரியர் விருதில் மகுடம் சூட்டப்படுமா?

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

 




ஆசிரியர்களுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் முறையே தேசிய நல்லாசிரியர், மாநில நல்லாசிரியர் (டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது), கனவு ஆசிரியர் விருதுகள் என வழங்கப்பட்டு வருகின்றன. 


அண்மைக்காலமாக இவ்விருதுகளுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் ஒளிவு மறைவின்றிக் கல்வி மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) மூலம் உரிய விவரங்களைப் பதிவேற்றம் செய்யச் செய்து அதன் பின்னர், உயர் அலுவலர்கள் உள்ளடக்கிய தேர்வுக் குழுவினரால் நேர்காணல் மேற்கொள்ளப்படுவது அறியத்தக்கது.


இந்நேர்காணல் ஏதோ பெயருக்கு இல்லாமல் ஒரு நபருக்கு அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றனர். அதில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு, கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு, சமூதாயப் பணிகள், பள்ளி மேம்பாடு, தனித்திறமைகள் முதலானவை இடம் பெற்றிருக்கும். 


அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்று பரப்புரையும் அறிவுரையும் சொல்லப்பட்டாலும் நடப்பியல் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. 


குறிப்பாக அவ்வக்கால ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினரின் பரிந்துரை மட்டும் அல்லது பரிந்துரையுடன் கூடிய அரசியல் தலையீடும் அதன் அடிப்படையில் மாவட்ட மற்றும் மாநில அளவில் திருத்தம் செய்யப்பட்டு இறுதி அறிவிப்பு வெளிவருவதாகப் பலராலும் இதுநாள்வரை நம்பப்படுவதாக அறியப்படுகிறது. 


இதில் முழுக்க முழுக்க உண்மை இல்லாமல் இருக்கலாம். அதேவேளையில் இது முழுவதும் பொய் என்று நிரூபிப்பதும் சிரமம். 


இது தேசிய நல்லாசிரியர் விருதிலும் எதிரொளிப்பதை உணர முடியாமல் இல்லை. மறைமுக அரசியல் ஈடுபாடு மற்றும் வெளிப்படையான ஆசிரியர் இயக்கப் போராட்ட நிகழ்வுகளில் பங்கேற்பு ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு இறுதித் தேர்வர்களைக் காட்டிலும் விஞ்சியவர்கள் புறக்கணிக்கப்படுவது என்பது மிகுந்த வேதனைக்குரியது. 


கல்வியில் அரசியலைக் கலப்பது என்பது தூய பசும்பாலில் நஞ்சை கலப்பது போலாகும். இதில் ஆசிரியர்களைப் பகடைக் காய்களாக்கிப் பரமபதம் ஆட நினைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல.  


நல்லாசிரியர் விருது என்பது நல்ல விதைகளைத் தேடித்தேடி தேர்ந்தெடுப்பதாகும். இதில் நேரடி அரசியல் தலையீடு காரணமாக சில சமயங்களில் அல்ல பல சமயங்களில் சொத்தை விதைகளைத் தேர்வு செய்து தருவதென்பது வருந்தத்தக்கது. 


இத்தகைய சகுனி விளையாட்டில் ஈடுபட்டு அவமானப்பட்டு நிற்பதைக் காட்டிலும் மேலானது ஒதுங்கிக் கொள்வது மிகவும் உத்தமம் என்று புறக்கணிப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருவதைக் காண முடிகிறது. எல்லா வகையிலும் தகுதி படைத்த ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. 


பல்வேறு குறுக்கு வழிகளில் சென்று புகுந்தாவது பெருமைக்குரிய பெருமிதம் மிக்க நல்லாசிரியர் விருதை அதிகார பலம் மற்றும் அதிகாரிகள் பலம் காட்டி எப்பாடுபட்டாவது வாங்கி விடவேண்டும் என்ற முனைப்பே அதன் மீதான மதிப்பையும் மரியாதையையும் மாசுபட வைத்து விடுகிறது. விருதுகள் பெறப்பட வேண்டுமேயன்றி ஒருபோதும் வாங்கப்படக் கூடாது என்பது கல்வியாளர்கள் பலரின் வேண்டுகோள் ஆகும். 


தவிர, பள்ளி ஆசிரியர்கள் தாம் கள்ளம் கபடமின்றி மேற்கொண்ட தன்னலமற்ற செம்மையான கல்விப் பணிக்குத் தரும் பூரண கும்ப மரியாதையாகத் தான் இந்த நல்லாசிரியர் விருதைப் பார்க்கின்றனர். நாளடைவில் அந்த விருது கோவில்களில் வழங்கப்படும் சுண்டல் போன்று வருவோர் போவோருக்கெல்லாம் கொடுத்து வருவதென்பது சரியல்ல. 


மேலும், ஆண்டுதோறும் ஆசிரியர் நாளான   செப்டம்பர் 5 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வெள்ளியால் ஆன பதக்கத்துடன் பத்தாயிரம் பணமுடிப்புடன் சான்றிதழ் வழங்கி கௌரவித்து வரும் அரசின் நல்லெண்ணத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 


அதேவேளையில், அதன் தரம் தாழ்ந்து போவதைத் தடுத்தி நிறுத்தி அதன் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு மட்டுமல்ல அதற்கு துணை போகும் ஆசிரியர்களுக்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. முதலில் அனைத்துக் குறுக்கு வழிகளும் தடுக்கப்பட வேண்டியது அவசியம். விருது வழங்கலில் அரசியல் குறுக்கீடுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுதல் நல்லது. 


இதில் பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் பெரும் பங்கு இங்கு எல்லோருக்கும் உண்டு. மேலும், விருது வழங்குதலில் அதற்கு கொடுக்கப்படும் தொகையே அதன் தரத்தையும் தகுதியையும் அதிகம் நிர்ணயிப்பதாக இருக்கிறது. இது நோபல், ஆஸ்கார், சாகித்திய, தகைசால் உள்ளிட்ட மாநில விருதுகள் அனைத்திற்கும் பொருந்தும். 


இத்தகைய நிலையில், மாநில நல்லாசிரியர் விருதுக்கான தொகையை இருபத்தைந்து ஆயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. மேலும், உண்மையாக விருது பெற்ற ஆசிரியர் பெருமக்கள் உவகை அடையும் பொருட்டு ஓர் ஆண்டு ஊதிய உயர்வு அளித்து பெருமைப்படுத்துவது நல்லது. 


மாவட்டம்தோறும் தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை என்று பாகுபாடு காட்டாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், விரிவுரையாளர் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் வகைமையில் அந்த கல்வியாண்டில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதை இனி வழக்கமாக்கிக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 


பேருக்கு விருது கொடுக்காமல் பேர் சொல்லும் அளவிற்கு அதைப் பெருமைப்படுத்தி வழங்குவதை நடப்பாண்டிலேயே உறுதி செய்து மகுடம் சூட்டிட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நடக்குமா?


எழுத்தாளர் மணி கணேசன் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent