மதுரை எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவனின் தந்தை, மகனுக்கு கல்வி அறிவை ஊட்டிய அரசுப் பள்ளிக்கு 3 நாள் ஊதியம் வாங்காமல் கட்டிட வேலைகளை மராமத்து பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிட மராமத்து வேலைகளை பார்க்க இப்பள்ளியில் படித்த மாணவனின் தந்தையும், உத்தப்புரத்தைச் சேர்ந்த கட்டிட பணியாளருமான அழகுமுருகனிடம் தலைமை ஆசிரியர் தனபால், முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் வேலை பார்க்கச் சொல்லியுள்ளனர்.
மூன்று நாட்கள் வேலை பார்த்தவரிடம், தலைமையாசிரியர் கூலியை வழங்கினார். அப்போது மாணவனின் தந்தை கூலி வேண்டாமென்றும் இப்பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும் என்று பணத்தை வாங்க மறுத்தார்.இது குறித்து அழகுமுருகன் கூறுகையில், “எனது மகன் பீமன் இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்துவிட்டு தற்போது திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிக்கிறார்.
எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய பள்ளிக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்யவேண்டும் என எண்ணினேன். அதனால் கூலி வாங்காமல் வேலை பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். ஆசிரியர் முருகேசன் கூறுகையில், “மாணவர் பீமன் பிளஸ் 2 தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்கள் நட்டு வளர்த்தார். இதை அறிந்த தனியார் நிறுவனம் இவரது உயர் கல்விக்கு ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக