இந்த வலைப்பதிவில் தேடு

ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் 6,158 அரசுப் பள்ளிகள்!

வெள்ளி, 15 நவம்பர், 2024

 




கர்நாடகத்தில் 6,158 அரசுப் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே வைத்து இயங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 1.38 லட்சம் மாணவர்கள் படிக்கும் 6,158 அரசுப் பள்ளிகளில் தலா ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 530 பள்ளிகளில் மாணவர்களே இல்லாமல் 358 ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.


கல்வி அமைப்பில் பெரிய குறைபாடாகக் காணப்படும் இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். பல பள்ளிகளில் சில ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும், சிலவற்றில் மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.


கடந்த 2023-24 கல்வியாண்டில் 6,360 ஆக இருந்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25 கல்வியாண்டில் 6,158 ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், மாணவர் சேர்க்கை 33,794 ஆக குறைந்துள்ளது.


கல்வி நிபுணர்கள் சொல்வது என்ன?


பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகிறது. பல பள்ளிகளில், ஆசிரியர்கள் கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை கற்பிக்க மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். கணிதம், அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதே நேரத்தில், 100% தேர்ச்சி விகிதத்தை காட்டுவதற்கு, பள்ளிகள் பெரும்பாலும் படிப்பில் பின்தங்கிய மாணவர்களை வெளியே தள்ளுகின்றன என்று கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.


குழந்தைகள் உரிமை ஆர்வலரும், சைல்டு ரைட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான வாசுதேவ் சர்மா கூறுகையில், ”இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் கன்னடம் அல்லது சமூக அறிவியல் பாடங்களை மட்டுமே கற்பிக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்க விரும்புகின்றனர். இதனால், பலர் அரசு உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகளை தேர்வு செய்கின்றனர்.


ஒரு மாணவர் மேல்நிலைக் கல்வியை அடையும் நேரத்தில், பள்ளிகள் வேண்டுமென்றே 10 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி விகிதத்தைத் தக்கவைக்க படிப்பில் பின்தங்கிய மாணவர்களை வெளியேற்றுகின்றன. இது உண்மையான கல்வித் தரத்தை பிரதிபலிக்கவில்லை. கல்வி அமைப்பின் தோல்வியை மறைக்கிறது.


முக்கியமாக, 7, 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு இடையில் ஏன் இடைநிற்றல் விகிதம் அதிகரிக்கிறது என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை” என்று கூறினார்.


"இந்தக் குழந்தைகள் எங்கு செல்கின்றனர். அவர்கள் மற்ற பள்ளிகளில் சேர்ந்தார்களா இல்லையா என்பது பற்றிய பதிவு எதுவும் இல்லை. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என்று அரசாங்கம் கூறினாலும், இடைநிற்கும் குழைந்தைகளில் சிலர் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மற்றவர்கள் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் குழந்தைத் திருமணங்கள் நடைபெறக்கூடாது என்றும் வலியுறுத்துகின்றன” என்றும் சர்மா தெரிவித்தார்.


ஆசிரியர்கள் பெரும்பாலும், அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான நகரங்களுக்கு மாற்றலாகி செல்கின்றனர். பல நேரங்களில், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆதிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் அவதியுறுவதும் நடக்கின்றன. ஆசிரியர்களுக்கு முறையான பயண வசதி, தங்குமிட வசதி எதுவும் செய்து தராமல் 50 கி.மீ க்கு மேலான தூரம் வரை அவர்கள் பயணம் செய்ய வேண்டும் என நியாயமற்ற முறையில் எதிர்பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


கல்வி வளர்ச்சிப் பேராசிரியர் நிரஞ்சனாராத்யா வி.பி கூறுகையில், ”ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்ற முறை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் நம்பிக்கை இழக்கவைக்கிறது.


முழுப் பள்ளிக்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பது கல்வி உரிமைச் சட்டத்தின் மீறலாகும். ஒரு தொடக்கப் பள்ளி குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களைக் கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் ஒரு உயர்நிலைப் பள்ளியில் (HPA) குறைந்தபட்சம் மூன்று ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.


இன்று, பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு மொழியாக அதை அறியவேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், அனைத்து பாடங்கள், வகுப்புகள் மற்றும் பணிகளை ஒரே ஒரு ஆசிரியர் கையாள வேண்டும் என்ற நிலையில் இது நடக்காது" என்று அவர் கூறினார்.


5,000 ஆசிரியர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவு


பொதுக்கல்வித் துறையின் ஆணையர் கே.வி.திரிலோக்சந்திரா கூறுகையில், “மாநிலம் முழுவதும் சுமார் 5,000 ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், குறிப்பாக ஹைதராபாத் - கர்நாடகா பிராந்தியத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனியார் உதவி பெறும் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இந்த ஆசிரியர் பணிசேர்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent