கோவை மாவட்டத்தில் பொதுத்தேர்வு பணிகள் மந்தமாக நடைபெறுவதால், ஆசிரியர்கள் சிரமமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் புகார் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும், மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இதற்கான பணிகளில் ஆசிரியர்கள் நியமிப்பது உள்ளிட்டவை முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
எப்போதும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை, பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை வெளிப்படையாக தெரிவிக்கப்படும்.
இந்தாண்டு, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு கூட முழுமையான தகவல் தெரிவிக்காமல் முதன்மை கல்வி அலுவலகம் ரகசியம் காத்தது. மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களுக்கு எங்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர் உள்ளிட்ட எந்த விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால், அறை கண்காணிப்பாளர் பணி எங்கு போடப்பட்டுள்ளது, என, ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளதாக, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில், கடந்த, 2024ம் ஆண்டு மேல்நிலை அரசு பொதுத்தேர்வு பணிகளால் மிகுந்த மனச்சோர்வும், இன்னலும் அடைந்தோம். இங்கு, 75 சதவீதத்துக்கு அதிகமான பெண் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்தாண்டு குளறுபடிகள் காரணமாக தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக அறை கண்காணிப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டதால், 400க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொலைதுார தேர்வு மையங்களில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டது.
பல பெண் ஆசிரியர்களுக்கு, 20 கி.மீ., தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால், ஒரு மணி நேரத்துக்கு மேலாக பயணம் செய்ய நேர்ந்தது.
நடப்பாண்டு மேல்நிலை அரசு பொதுத்தேர்வு பணிகள், கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இது, பட்டதாரி ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணி மூப்பின் அடிப்படையில் தேர்வு பணிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
அறை கண்காணிப்பாளர் பணியிடங்கள் குலுக்கல் முறையை பின்பற்றாமல், அலுவலக பணியாளர்களால் நிரப்பும் பழைய முறையை பின்பற்ற வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணி ஒதுக்கீடு செய்யும் போது, பணியாளர் விபர பட்டியலில் உள்ள வீட்டு முகவரியை அடிப்படையாக கொண்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தேர்வு பணி தொடர்பான அனைத்து பட்டியல்களும், காலம் தாழ்த்தாமல் தேர்வுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே வெளியிட வேண்டும். ஆசிரியர்கள் அளிக்கும் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் தேர்வு துவங்கும் முன், கல்வி தொடர்பான வழிகாட்டு கூட்டங்கள் நடைபெற்றதால் ஆசிரியர்கள் தேர்வு பணிகளை எளிதில் செய்ய ஏதுவாக அமைந்தது. எனவே, இந்தாண்டும் தேர்வு வழிகாட்டு கூட்டங்கள், கல்வி மாவட்ட அளவில் நடத்த வேண்டும்.
உரிய மருத்துவ காரணங்களால், தேர்வு பணிகளில் விலக்கு கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே முறையை பின்பற்றணும்!
மேல்நிலை அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்களை பொறுத்தவரை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விருப்பத்தின் அடிப்படையில், வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள விடைத்தாள் திருத்தும் முகாமை தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது.
அதை இந்தாண்டும் கடைப்பிடிக்க வேண்டும்.மேல்நிலை அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்களில், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர், முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வு அலுவலர் உள்ளிட்ட தேர்வு பணிகளை, அந்தந்த பாடத்தின் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணி மூப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக