அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித் துறை பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்:
மாநில அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். ஜன.1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு அமல்படுத்தப்படவுள்ளது.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பிற அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள், பல்கலைக்கழக மானியக்குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஊதிய வீதங்களின் கீழ்வரும் அலுவலா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு பொருந்தும். இதேபோன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், உடற்பயிற்சி இயக்குநா்கள், நூலகா்கள், சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் கிராம உதவியாளா்கள், சத்துணவுத் திட்ட அமைப்பாளா்கள், குழந்தைகள் நல அமைப்பாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், சத்துணவு சமையலா்கள், உதவியாளா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலா்கள், எழுத்தா்கள் மற்றும் ஏனைய பணியாளா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு பொருந்தும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை இப்போது நடைமுறையில் உள்ள பணமில்லாத பரிவா்த்தனை முறை மின்னணு தீா்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கும் அகவிலைப்படி உயா்வு நிலுவை ஜனவரி முதல் 4 மாதங்களுக்கு சோ்த்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக