தி. நகரில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்கள் மூலம் 1 கோடி குடும்பங்களுக்கு நோய்த்தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் பள்ளிச் செல்லும் குழந்தைகளை பரிசோதிப்பதற்காக மூன்று புதிய நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகத்தான திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு மற்றும் ஆரம்பகால நோய் கண்டறிதல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நோய்கள் ஏற்படுவதற்கு காரணமே விழிப்புணர்வு இல்லாமை தான். ஆகையால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளில் இத்திட்டத்தை துவங்குவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் அதிகரிப்பை குறைப்பதற்கும் உடனடியாக உரிய மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இத்திட்டம் பெரிய அளவில் உறுதுணையாக இருக்கின்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16 ஆயிரத்து 566 பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 5,76,000 மாணவர்களுக்கு தேசிய சிறார் நலத்திட்டத்தின் மூலம் மருத்துவ அலுவலர்களால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நோய் தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி மாணவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தாது.
5,76,000 மாணவர்களுக்கு இந்த பயிற்சியை தொடங்குவதன் மூலம் ஒரு கோடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த மாணவர்கள் சுகாதார தூதுவர்களாக கருதப்படுவார்கள். வளரிளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த விழிப்புணர்வு மூலம் அவர்களின் முடிவெடுக்கும் திறன், சிக்கல்களை தீர்க்கும் திறன், உணர்வுகளை கட்டுப்படுத்துதல், மனஅழுத்த மேலாண்மை, ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்தும் திறன்களை உருவாக்குதல் போன்றவற்றை கொண்டு போய் சேர்ப்பதற்கு இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை நேரடியாக தேடிச் சென்று மருத்துவக் குழுக்களின் மூலம் மனநல ஆலோசனை குழுக்கள் மூலம் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் மாணவர்கள் மன அழுத்தம் போன்ற பல்வேறு விஷயங்களில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்புள்ளது.
தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மூன்று நடமாடும் மருத்துவ குழுக்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 805 மருத்துவ குழுக்கள் மூலம் பிறந்த குழந்தை முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 30 வகையான நோய்களை கண்காணிப்பதற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு மேல்சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது." என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக