பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பர் கைது செய்யப்பட்டார். கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பள்ளி வாகன ஓட்டுநர் வற்புறுத்தியதால்தான் கேட்டை திறந்துள்ளார் ரயில்வே பணியாளர்” என்ற தகவலையும் வெளியிட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் இருவரும், “ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது” என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில், விபத்து குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே கடலூர் செம்மங்குப்பம் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக