இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வீடியோ வெளியிட்ட அரசுப்பள்ளி மாணவிகள் - போலீஸார் விசாரணை

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

 




ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு குறித்த மாணவிகள் வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக, தொடர்புடைய மாணவியின் தாயாரிடம் போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.



இது தொடர்பாக பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடியோ வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மேலும் 3 மாணவிகள் ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக புகார் தெரிவித்து பேசும் வீடியோ வெளியானது.



இது தொடர்பாக போலீஸார் மற்றும் சைல்ட் லைன் அமைப்பினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளியில் இருக்கும் மாணவிகள் யாரும் அது போன்ற ஒரு குற்றச்சாட்டை சொல்லவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து இந்த வீடியோ காட்சிகள் வெளியிட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்த பொழுது, அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் தாய் என்பது தெரிய வந்தது.



இதையடுத்து அவருக்கு, கோவை பேரூர் அனைத்து மகளிர் போலீஸார் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதைத் தொடர்ந்து மாணவியின் தாய் நேற்று மகளிர் போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜாரானார். அவரிடம் போலீஸார் மேற்கண்ட வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். சில மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.



முன்னதாக, பேரூர் போலீஸாரிடம் விசாரணைக்கு செல்லும் முன்பாக மாணவியின் தாய் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நான் ஒரு அமைப்பில் மாநில நிர்வாகியாக இருக்கிறேன். சம்பந்தப்பட்ட பள்ளியில் தொடர்ச்சியாக நிறைய தவறுகள் நடக்கின்றன. இதுகுறித்து சைல்டு லைன் உட்பட தமிழக முதல்வர் வரை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து குழந்தைகள் பேசும் வீடியோவை எடுத்து வெளியிட்டேன்.



இதில் உண்மைத் தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என நினைத்தேன். இதில் உண்மைத்தன்மை இருப்பதை அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் இருக்கும் இரண்டு வீடியோக்களும் ஒரே நேரத்தில் எடுத்தது தான். முதலில் இருக்கும் வீடியோவில் இருக்கும் குரல் என்னுடையது. அடுத்த வீடியோ எனக்கு தெரிந்த இளைஞரை வைத்து எடுத்து வெளியிட்டேன்.



பள்ளியில் குழந்தைகளிடம் விசாரிக்கும் பொழுது அவர்கள் உண்மையைச் சொல்ல மறுக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களாகவே பள்ளி நிர்வாகத்துடன் எனக்கு பிரச்சனை இருந்து வருகிறது. அது தனி. அதே சமயம், எனக்கும் அந்த ஆசிரியர்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் முறையாக விசாரிக்க வேண்டும்"என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent