இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர், பெற்றோருடன் கலந்துரையாட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

வியாழன், 2 ஏப்ரல், 2026





பள்ளிகளில் மாணவ - மாணவியருடன் கலந்துரையாடவும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவோரை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும் ஆசிரியர்களுக்கு கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. 

டில்லியில், 2026 - 20-27ம் கல்வியாண்டுக்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவு: அனைத்து வகுப்புகளிலும் மாணவ - மாணவியருடன் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். 

மேலும், மாணவ - மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால விருப்பங்களை அறிய வேண்டும். அதேபோல, பள்ளிக்கு வராதவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளிப் படிப்பை தொடர அறிவுறுத்த வேண்டும். மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடனும் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும். 

மாணவர்களின் பதிவேடுகளை புதுப்பிக்க வேண்டும். மேலும், இந்த கல்வி ஆண்டுக்கான கற்றல் நோக்கங்கள் மற்றும் கல்விசார் எதிர்பார்ப்புகளை விளக்கும் பாடத்திட்டம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மாணவ - மாணவியரின் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, பாடம் வாரியான இடைவெளிகளை கண்டறிந்து, அவர்களின் இலக்கு சார்ந்த படிப்புக்கு அறிவுறுத்த வேண்டும்.


அதே நேரத்தில், சக மாணவர்களுடன் இணக்கமான நட்புடன் பழகுதல், மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். பள்ளியின் கால அட்டவணைகளை உறுதி செய்தல், பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருத்தல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். 

பாடப்புத்தகங்கள் தாமதம் இன்றி வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தில் வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும். நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பணியாளர்கள் அமர்த்த வேண்டும். கல்வி ஆண்டு அட்டவணையை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முந்தைய கல்வியாண்டின் தேர்வு முடிவுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும். 

இணைப் பாடத்திட்டம், விளையாட்டு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்துவதில் ஆசிரியகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கல்வித் துறை அதிகாரிகள், பள்ளிகளுக்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்ய வேண்டும். இயக்குநரகத்தில் உத்தரவுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent