அரசுப் பள்ளி விடுதியில் பேய் இருப்பதாக வதந்தி பரவிய நிலையில் மாணவர்களின் பயத்தைப் போக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இரவு முழுவதும் விடுதியில் தங்கினர்.
மகாராஷ்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள டோமா கிராமத்தில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் மேல்நிலை பள்ளியில் ஒரு விநோத சம்பவம் நடைபெற்றது.
அந்தப் பள்ளியின் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலருக்கு சில வாரங்களுக்கு முன் பேய் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த விடுதியில் பேய் இருப்பதாக மாணவிகள் இடையே வதந்தி பரவிய நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் 850 பேரில் 610 பேர் தங்களின் வீடுகளுக்குச் சென்றனர்.
இந்த நிலையில், அரசு மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் விடுதியில் சோதனை நடத்தப்பட்டது. அதில், விடுதியில் பேய் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் மாணவிகளுக்கு ஏற்பட்ட மன அழுத்தம், பயம் காரணமாக அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சோதனை நடத்திய பின்னரும் கிட்டத்தட்ட 350 மாணவர்கள் விடுதிக்குத் திரும்பவில்லை. பண்டிகை விடுமுறைகள் காரணமாக அவர்கள் வராமல் இருக்க வாய்ப்புள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தாலும், பேய் பயம் காரணமாகவே அவர்கள் விடுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், மாணவர்களின் பயத்தைப் போக்க முடிவு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, அமராவதி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் யேரேகர், காவல்துறை கண்காணிப்பாளர் நிகேதன் கதம், மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி சத்யம் காந்தி ஆகியோர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அப்பள்ளியின் விடுதிக்குச் சென்று மாணவர்களுடன் (செப். 1) இரவு முழுவதும் தங்கியிருந்தனர்.
மாணவர்களுடன் ஒன்றாக இரவு உணவு உண்ட அதிகாரிகள் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவர்களுடன் கலந்துரையாடினர்.
மாணவர்களுடன் பேசிய மாவட்ட ஆட்சியர் யெரேகர், “நான் சிறுவயதில் மாவட்ட ஆட்சியர் ஒருவரைப் பார்த்து அவரைப் போன்று ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன். இப்போது நான் அதை சாதித்துக் காட்டியுள்ளேன். முயற்சி செய்தால் நீங்களூம் எங்களை போன்று ஆகமுடியும்.
பழங்குடியினர் சமூகம் பேய்களுக்கு பயப்படுபவர்கள் அல்ல. காடுகளில் புலிகளையும் கரடிகளையும் எதிர்த்துப் போராடிய சமூகமான நீங்கள் பிர்சா முண்டா, தாந்தியா பில் போன்றோரின் வழித்தோன்றல்கள். உங்கள் வாழ்க்கைக்குள் மூடநம்பிக்கையை அனுமதிக்காதீர்கள். அறிவியலையும், கல்வியையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
கலந்துரையாடலுக்கு முன்பு புகழ்பெற்ற கஞ்சிரி கலைஞர் சந்தீப்பால் மகாராஜின் நாட்டுப்புற இசை மற்றும் உரையாடல் நிகழ்வு நடத்தப்பட்டது.
மாணவர்கள் அதிகாரிகளிடம் அவர்களது வாழ்க்கைப் பயணம், அரசுப் பணி தொடர்பான சந்தேகங்களைக் கேட்டறிந்து கொண்டனர். அவர்கள் விடுதியில் வந்து தங்கியதால் தற்போது பயம் நீங்கியதாகவும் சில மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்கள் தங்குமிடத்தில் உள்ள நெருக்கடியைக் குறைக்கும் விதமாக புதிய விடுதி ஒன்று கூடுதலாகக் கட்டப்பட்டிருந்த நிலையில், இதே நிகழ்வில் அந்த விடுதியையும் அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக