பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரை, ஊராட்சி செயலாளர் மாணவர்களின் முன்னிலையில் முட்டி போட வைத்த அதிர்ச்சி சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கல்வித்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் மகனுக்கு பனிஷ்மென்ட் கொடுத்ததால் அவரது தந்தை, வகுப்பறையில் மாணவர்களுக்கு முன் ஆசிரியரை முட்டி போட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக கற்பகம் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 20ம்தேதி இந்த பள்ளியில் கரும்பலகை மற்றும் சுவர்களில் சில ஆபாசமான வசனங்களும், கருத்து படங்களும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனை யார் செய்தது என 12ம் வகுப்பு வணிகவியல் முதுகலை ஆசிரியர் கபில்தேவ் கேட்டபோது, மாணவர்கள் அனைவரும் தெரியாது என பதில் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் கபில்தேவ், அனைத்து மாணவர்களையும் முட்டிபோட வைத்தார். இதில் முட்டி போட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை ராஜசேகர், தேனூர் ஊராட்சியில் செயலாளராக உள்ளார். ராஜசேகரன் மனைவி தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக பதவி வகித்துள்ளார். தனது மகனை வகுப்பில் முட்டிபோட ஆசிரியர் சொன்னதால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் ராஜசேகர், பள்ளிக்கு சென்று எனது மகனை முட்டிபோட சொல்லும் அளவிற்கு ஆசிரியருக்கு துணிச்சல் உள்ளதா என சத்தம் போட்டு திட்டியதோடு, ஆசிரியர்கள் செய்கிற பிரச்னைகள் தெரியாதா? இதற்கு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும், அதுவரை ஆசிரியர் கபில்தேவ் முட்டிபோட வேண்டும் என கூறி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன ஆசிரியர் கபில்தேவ் வகுப்பில் மாணவர்களுக்கு முன் சிறிதுநேரம் முட்டி போட்டுள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் பள்ளிக்கு வந்த முதுகலை ஆசிரியர் கபில்தேவ், பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்டு இப்படியே விட்டால் ராஜசேகரும், அவரது மனைவியும் பள்ளியில் ஆதிக்கம் செலுத்துவார்கள், ஆசிரியர்களை தொடர்ந்து மிரட்டுவார்கள், இதற்கு முடிவு கட்ட வேண்டும். ஊராட்சி செயலாளர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கலெக்டர் ஆகியோரிடம் புகார் கொடுக்க போகிறேன். நீங்கள் அனைவரும் வர வேண்டும் எனக்கூறியதோடு பள்ளியில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து கொண்டு இரவு 8 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மருத்துவ விடுப்பில் சென்றதை அறிந்து மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சதாசிவம் என்பவரிடம் தகவல் தெரிவித்ததுடன், கலெக்டர் ஷரண்யா அறியை நேரில் சந்தித்து முறையிட்டனர். புகார் மனுவை பெற்ற அவர், இது தொடர்பாக மாவட்ட பொறுப்பு முதன்மை கல்வி அலுவலர் மூலம் நேரடி விசாரணை நடத்த உத்தரவிடுவதாக கூறினார். இந்த சம்பவம் தேனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக