இந்த வலைப்பதிவில் தேடு

 மது அருந்திய அரசு பள்ளி மாணவிகளால் பரபரப்பு

சனி, 12 செப்டம்பர், 2026

புதுச்சேரி நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 3 மாணவிகள் மதுபோதையில் வந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பில் இருந்த 3 மாணவிகள் வழக்கத்திற்கு மாறாக தங்களது இருக்கையில் சரியாக அமர முடியாமல் தள்ளாடியபடி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களின் நடவடிக்கையிலும் மாற்றம் காணப்பட்டதாக தெரிகிறது

இதனை கவனித்த ஆசிரியை, மாணவிகளின் அருகில் சென்று விசாரித்துள்ளார். அப்போது 3 மாணவிகளும் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளிக்கு வந்த பெற்றோர், தங்களது மகள்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் பள்ளி தலைமையாசிரியர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மாணவிகளிடம் விளக்கக் கடிதமும், பெற்றோரிடம் உரிய விளக்கமும் பெறப்பட்டதாக தெரிகிறது. பின்னர் 3 மாணவிகளையும் வரும் 14-ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பள்ளியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட 3 மாணவிகளையும் நகரப் பகுதியில் உள்ள வெவ்வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிக்கு மாணவிகள் மதுபோதையில் வந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் புதுச்சேரியில் கல்வித்துறை மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் பள்ளிக்கு மதுபோதையில் வருவதற்கான சூழல் எவ்வாறு ஏற்பட்டது, அவர்களுக்கு மதுபானம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகமும் கல்வித்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent