இந்த வலைப்பதிவில் தேடு

கல்வித்துறை திட்டப் பணிகளுக்கு 300 ஆசிரியர்கள் ‘மடைமாற்றம்’?

வெள்ளி, 9 அக்டோபர், 2026

கல்வித்துறை திட்டப் பணிகளுக்காக 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 'மாற்றுப்பணி' வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்ந்த பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பாடத்திட்டம் உருவாக்கம், பாடப் புத்தகம் உருவாக்கம், ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி ஏடு தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் பணியாற்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அரசு, உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பாடம் வாரியாக தேர்வு செய்யப்பட்டு, மாற்றுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பணிமனை சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ளது. சென்னை துாரத்தை கருத்தில்கொண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்) செயல்படும் விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியருக்கு மதுரை விரகனுார் தெரசா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் கிளை பணிமனைகள் செயல்படுகின்றன. இங்கு ஆசிரியர்கள் 4 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து மாற்றுப்பணியில் நீடிப்பதால் அவர்கள் சார்ந்த பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கிறது.


இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: திட்டப் பணிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனித்திறமை தேவை. ஆனால் பலர் பள்ளி செல்வது, கற்பித்தல், மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்துவது போன்றவற்றில் இருந்து தப்பிக்க 'டயட்' பொறுப்பாளர் சிலரை சரிக்கட்டி தொடர்ந்து மாற்றுப்பணியில் நீடிக்கின்றனர்.


இவர்களுக்கு தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலும் விலக்கு உள்ளது. சம்பளத்துடன் தினம் ரூ.300 ஊக்கத் தொகை உண்டு. சில உதவிபெறும் பள்ளி நிர்வாகம் தங்கள் ஆசிரியரை திரும்ப பெற விருப்பம் தெரிவித்தாலும், எஸ்.சி.இ.ஆர்.டி., அதிகாரிகள் தயவில் அவர்கள் இப்பணியிலேயே நீடிக்கின்றனர். பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கிறது. இவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு சுழற்சி முறையில் ஆசிரியர் தேர்வு செய்ய வேண்டும் என்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent