'குரூப் - 4 தேர்வு முறைகேடுகள் அம்பலமாகி உள்ள நிலையில், அடுத்த மாதம் துவங்கும், பள்ளி பொதுத் தேர்வுகள், எந்த குளறுபடிகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மார்ச், 2ல், பிளஸ் 2 பொது தேர்வு துவங்க உள்ளது. மார்ச், 4ல், பிளஸ் 1க்கும்; மார்ச், 17ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. பொது தேர்வை நடத்தும் வழிமுறைகள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி, இயக்குனர்கள் கருப்பசாமி, உஷாராணி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். பள்ளிக் கல்வி துறையில் தற்போதுள்ள பிரச்னைகள், பணி நியமன விவகாரம், வழக்குகளின் நிலை, மத்திய - மாநில அரசு நலத் திட்டங்கள், பொது தேர்வு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து, இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, முதன்மை செயலர் தீரஜ்குமார், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிர்வாக நடைமுறைகளில், இதுவரை ஏதாவது குளறுபடிகள் இருந்தால், அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், கருத்துருக்கள் தயாரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவது, பாடப் புத்தகங்களை விரைந்து வழங்குவது, பொது தேர்வை பிரச்னையின்றி நடத்துவது குறித்தும், ஆலோசனை வழங்கினார்.
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில், முறைகேடுகள் நடந்து, அரசு ஊழியர்களும், தேர்வர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், பள்ளிப் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளதால், 'அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்' என, அறிவுறுத்தினார். மேலும், 'எந்தவித முறைகேடுகள் மற்றும் விதிமீறல் புகார்கள் எழுந்து விடாமல், கவனமாக செயல்பட வேண்டும்' எனவும், தீரஜ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக