இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களை கழிப்பறை கழுவ வைத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

 


திருப்பூரில் ஆதிதிராவிடர் குழந்தைகளைக் கழிப்பறை கழுவ வைத்த அரசுப் பள்ளி பெண் தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.



திருப்பூர் அருகே உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தைச் சேர்ந்த கீதா (45) என்பவர், கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பள்ளியானது, கரோனா பாதிப்பின் காரணமாக சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.


இந்த நிலையில் தலைமை ஆசிரியர் கீதா, மாணவ, மாணவிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷுக்கு மாணவ - மாணவியர் புகார் அளித்தனர். தொடர்ந்து, சாதிப் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவதாகவும், பள்ளியில் உள்ள கழிப்பறையை ஆதிதிராவிடர் குழந்தைகளை வைத்துக் கழுவ வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர்.



புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், நேற்று முன் தினம் இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், புகார் தொடர்பாகப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். புகார் குறித்து தலைமை ஆசிரியர் கீதாவிடமும் விசாரணை நடத்தினர்.


இதனிடையே, விசாரணை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ரமேஷ் கூறுகையில், ''தலைமை ஆசிரியர் கீதா மீது வந்த புகாரின் அடிப்படையில், பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியது, ஆதிதிராவிடர் குழந்தைகளைக் கழிப்பறையைக் கழுவ வைத்த புகார் அடிப்படையில், தலைமை ஆசிரியர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent