தொடக்க கல்வி பிரிவுக்கு மாவட்டந்தோறும், தனி அலுவலகங்களை மீண்டும் திறக்க, பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் முடிந்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகுமார், ஏற்கனவே டி.ன்.பி.எஸ்.சி.,யில் பல நிர்வாக மாற்றங்களை செய்தவர். அதேபோல, பள்ளிக்கல்வியை கண்காணிக்கும் முதல்வர் அலுவலக முதன்மை செயலர் உதயசந்திரனும், பள்ளிக்கல்வி துறையிலும், டி.என்.பி.எஸ்.சி.,யிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டவர்.
எனவே, உதயசந்திரனின் ஆலோசனைப்படி, தமிழக பள்ளிக் கல்வியின் நிர்வாக முறைகளில் மாற்றம் செய்ய, நந்தகுமார் முயற்சித்து வருகிறார். இதன்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் இருந்த பல்வேறு அதிகாரங்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டன.
இதற்கான அரசாணை அமலானபின், உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு, நிர்வாக விஷயங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், மாவட்டங்களுக்கு அதிகாரங்கள் வழங்கிய, 101, 108 என்ற எண்கள் கொண்ட அரசாணையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆலோசனை, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் தலைமையில் நடந்துள்ளது.இதில், தொடக்க கல்வி பிரிவுக்கு, மீண்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களை தனியாக நியமிக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துரு தயார் செய்யவும், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கருத்துருவை, முதல்வர் அலுவலகத்தில் தாக்கல் செய்தபின், அங்கிருந்து ஒப்புதல் கிடைத்ததும், முறையாக அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக