பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைகளின் கீழ் இயங்கும் விடுதி மாணவர்களுக்கு திருத்தம் செய்யப்பட்ட உணவுப் பட்டியலின்படி, புதிய உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் வளாகத்தில் உள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று நடந்தது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.கண்ணப்பன் முன்னிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பிசி, எம்பிசி மற்றும் சிறுபான்மையினர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகளில் 86,514 பேர் பயன்பெறுவர். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு நாளும் 3 வேளையும் வழங்கப்படும் உணவுப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு திங்கள்கிழமை காலை சேமியா கிச்சடி, தக்காளி சட்னி ஆகியவையும் மதியம் சாதம், சாம்பார், 2 பொறியல்கள், ரசம், மோர், முட்டை ஆகியவையும் இரவு சப்பாத்தி மற்றும் குருமாவும் வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவுகள் பரிமாறப்படும்.
விழாவில் பிசி, எம்பிசி, சிறுபான்மையினர் நலத் துறை முதன்மைச் செயலர் ஆ.கார்த்திக், சிறப்பு செயலாளர் சம்பத், ஆணையர்கள் அணில் மேஷ்ராம், எம்.மதிவாணன் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக