தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் தீவிரமடைந்துள்ளது என வானிலை மைய தென் மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார். தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் தீவிரமடைந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. 8 இடங்களில் கனமழை, ஒரு இடத்தில் மிக கனமழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருகுவளையில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்யும்.
செப்.2 முதல் ஒருசி இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒறுத்து இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த ஜூன் 1 முதல் ஆக.31 வரை தென் மேற்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இந்த மழைப் பொழிவானது இயல்பைவிட 88% கூடுதலாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இயல்பை விட 93% அதிகமாக மழை பெய்துள்ளது; இது கடந்த 122 ஆண்டுகளில் 3வது அதிகபட்ச மழையாகும். தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட 100%க்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அநேக இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் இவ்வாறு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக