இந்த வலைப்பதிவில் தேடு

70% நிறைவேற்றம்; எஞ்சிய 30% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

வியாழன், 1 செப்டம்பர், 2022

 



தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர், சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்று தந்தவர் அண்ணா என்றார்.


திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70% நிறைவேற்றம்:


திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றம்; எஞ்சிய 30 சதவீத வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். என்னிடம் மக்கள் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு மனுக்களை கொடுக்கின்றனர். சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொண்டிருப்பது தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி.


ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது உரிய நடவடிக்கை:


ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபத்தி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அதிமுக ஆட்சியில் ஒப்புக்காக நடைபெற்றது. ஓபிஎஸ்சை சமாதானப்படுத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அப்போதைய முதல்வர் ஈபிஎஸ் அமைத்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என கூறியவர் ஈபிஎஸ். திமுக ஆட்சி வந்தவுடன் ஆணையத்தை ஒழுங்குபடுத்தி உரிய விசாரணை நடைபெற்றது.


விரைவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000:


குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். மாநிலத்தின் நிதிநிலைமையை சரிசெய்து கொண்டு இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் 1000 விரைவில் வழங்கப்படும் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent