ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அண்மையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி), இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் போலீசார், அம்மாணவர்கள் மீது தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
சிஎம்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த விசாரணையில், ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக காவல்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் விளக்கினார்.
தொடர் விசாரணையில் 7 மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பில், ராகிங்கை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளதாகவும், ராகிங் தடுப்பு சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதாகவும் விளக்கினார்.
இதையடுத்து, புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சிஎம்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம். ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக