இந்த வலைப்பதிவில் தேடு

போன் போட்டு 600-க்கு 600னு சொன்ன ஆசிரியை.. அடுத்து திண்டுக்கல் நந்தினி கேட்டது என்ன தெரியுமா?

வெள்ளி, 26 மே, 2023

 



சின்ன வயதிலிருந்தே என் அப்பா படும் கஷ்டத்தை பார்த்து பார்த்து நான் படிக்க ஆரம்பித்தேன்.


இந்த கஷ்டத்தை மாற்ற படிப்பு வேண்டும் என நினைத்தேன் என்று திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளி நந்தினி தெரிவித்தார்.


தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 600- க்கு 600 மதிப்பெண்களை பெற்று சாதனை மாணவியானார் திண்டுக்கல் நந்தினி. இவர் அரசு உதவி பெறும் அண்ணாமலையார் பள்ளியில் படித்தவர். தற்போது கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் சேர்ந்துள்ளார்.


இவரது சாதனை குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு நந்தினி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் 600- க்கு 600 மதிப்பெண்களை பெற்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் அப்பா, அம்மா, ஆசிரியர்கள் முகத்தில் அத்தனை சந்தோஷம் இருந்தது. தினமும் பள்ளிக்கு சென்றாலும் ரிசல்ட்டை பார்த்துவிட்டு பள்ளிக்கு போன போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.


எங்கள் வீட்டில் அப்பா, அம்மா படும் கஷ்டங்களை பார்த்து நானாகத்தான் படித்தேன். எனக்கு யாரும் படி படி என அழுத்தம் கொடுக்கவில்லை. என் அப்பா, அம்மா படும் கஷ்டத்தை என்னிடம் சொல்ல மாட்டார்கள். என் கையில் படிப்பு இருந்தால் என் குடும்பத்தின் நிலையை மாற்ற முடியும் என நினைத்தேன். அதனால் நன்றாக படித்தேன். எனது மார்க்கை கேட்டு என் அம்மாவுக்கு பேச்சே வரலை.


ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. என் அப்பா கண்களில் இருந்து தண்ணீர் வந்ததை ரிசல்ட் வந்த அன்றுதான் நான் பார்த்தேன். என் அப்பாவிடம் படிப்பு சம்பந்தமாக எதை கேட்டாலும் எனக்கு வாங்கித் தந்துவிடுவார். பண விவகாரங்களில் அம்மா, அப்பா நிறைய பிரச்சினைகளை சந்தித்துள்ளார்கள். அதை கேட்கும் போது கஷ்டமாக இருக்கும்.


இந்த சூழலை எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து மாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ண ஓட்டமாக இருக்கும். ஒரு கடைக்கு போவோம், ஒரு டிரஸ் அழகாக இருக்கும், அதை வாங்கலாம் என தோன்றும். ஆனால் அதன் விலையை பார்க்கும்போது நம்மால் முடியாது, அதனால் அப்பா கையில் இருக்கும் பணத்தில் டிரஸ் வாங்குவேன். டிரஸ் என்பது மட்டுமில்லை, இதை தாண்டி நிறைய விஷயங்களை நாம் மாற்றி நம் வீட்டில் இருப்பவர்கள் ஆசைப்படுவதையாவது வாங்கித் தர வேண்டும் என நினைத்து படித்து நிறைய முயற்சிகளை எடுத்தேன்.


கஷ்டங்களை கண்டு எப்போதும் கவலைப்படுவதில் எந்த பயனும் இல்லை. அதற்கு தீர்வு காண்பதில்தான் அர்த்தம் உள்ளது. அந்த கஷ்டங்களை தீர்வு காண்பதற்கு என் கையில் படிப்பு இருக்கிறது. என்னுடைய தமிழ் ஆசிரியை அனுராதா அம்மாதான் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்கள். கொரோனா நேரத்தில் அவருடைய மொபைல் போனை கொடுத்து என்னை ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் செய்ய வைத்தார்கள்.


600 க்கு 600 என்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மற்ற பாடங்களில் எப்போதுமே 100-க்கு 100 தான் எடுப்பேன். ஆனால் மொழிப்பாடங்களில் 99 தான் எடுத்திருந்தேன். தற்போது 100 க்கு 100 வந்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. டைம் டேபிள் போட்டெல்லாம் நான் படிக்கவே மாட்டேன். எழுதியும் பார்க்க மாட்டேன், நிறைய முறை திரும்ப திரும்ப படிப்பேன். படிக்க வேண்டும் என்பதற்காக நெருங்கிய சொந்தங்களாக இருந்தாலும் அவர்களுடைய வீட்டு விசேஷங்களுக்கு போகவே மாட்டேன்.


என்னால் எனது மார்க்குகளை பார்க்க முடியவில்லை. எங்கள் பள்ளியிலிருந்து தமிழ் ஆசிரியைதான் எங்களுக்கு போன் செய்து நான் முழு மதிப்பெண்களை பெற்றேன் என சொன்னார். மொழிப்பாடங்களில் 100-க்கு 100 வரும் என எதிர்பார்க்கலை, அதனால் சரியாக பாருங்கள் என்றேன். ஆனால் தமிழ் ஆசிரியை இல்லைம்மா நான் பார்த்துவிட்டேன், சரியாகத்தான் இருக்கு என்றார். எனக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது.


விஜய்யின் தந்தை சந்திரசேகர் சார் எனக்கு போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார். அப்பா, அம்மா எல்லோரும் சேர்ந்து வெளியே போக முடிவு செய்வோம். ஆனால் அப்பாவுக்கு அந்த நேரம் பார்த்து தச்சு வேலை வந்துவிடும். அதனால் எங்களை போக சொல்லவிட்டு அவர் வேலைக்கு போய்விடுவார். அந்த வேலை இருந்தால்தான் வாழ்வாதாரம் என எனக்கு புரியும். ஆனால் அப்பா இல்லையே என வருந்துவேன் என்றார் நந்தினி.


இதுகுறித்து அவருடைய பெற்றோர் கூறுகையில் என் மகள் 590 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதையும் தாண்டி மாவட்டத்தில் முதல் மதிப்பெண், மாநிலத்தில் முதல் மதிப்பெண் என வந்ததும் எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் படும் கஷ்டத்தை நந்தினி பார்த்து பார்த்து, எங்களை கஷ்டப்படாமல் பார்த்துக்க சம்பாதிக்கணும், அதற்காக படிக்கணும் என அடிக்கடி சொல்வார் என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent