இந்த வலைப்பதிவில் தேடு

மருத்துவம் அறிவோம் - பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் அச்சமா..?

சனி, 6 மே, 2023

 



இதயத்தில் கொழுப்பு, தொற்று, வீக்கம் ஆகிய காரணங்களால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரலாம்.  நல்ல தூக்கம் இருந்தால் ஆயுள் நீண்டு இருக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது. 


நமது வாழ்க்கை முறை மாற்றத்தால் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேசமயம் அறிவியலின் வளர்ச்சியால் அதற்கான தீர்வுகளும் ஒரு புறம் எளிதில் கிடைத்து வருகின்றன. கோவிலை போன்ற இதயத்தை பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது. கெட்ட பழக்கங்களை கைவிடுதல், முறையான உடற்பயிற்சி, உணவுப்பழக்க வழக்கங்கள் மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகள் ஆகும். 


இவற்றையெல்லாம் கடைபிடிக்காமல் விட்டு விட்டேன், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இப்போது மாரடைப்பு வந்து விட்டது, என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறேன். டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை, திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார். 


அறுவை சிகிச்சை என்றதும் பலருக்கு உயிர் பயம் இருக்கும். இதய அறுவை சிகிச்சை என்றதும் அச்சப்பட வேண்டாம். இதய அறுவை சிகிச்சையிலும் நவீன சிகிச்சைகள் வந்து விட்டன. இதய நோய்க்கு பல அறுவை சிகிச்சைகள் உள்ளன. அதிகமாக செய்யப்படும் சிகிச்சைகள் என்றால் பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்றம் செய்வது, இதயத்தில் ஓட்டை மூடும் சிகிச்சை தான். இதயத்தில் கொழுப்பு, தொற்று, வீக்கம் ஆகிய காரணங்களால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரலாம். 


இந்த ரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு இருப்பின் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு ஸ்டென்ட் என்ற சிறிய குழாய் பொருத்தப்படும். இந்த சிகிச்சையானது ரத்த ஓட்டத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ள சுருங்கிய ரத்தக் குழாயை விரிவுபடுத்தி ரத்தம் சீரான முறையில் செல்ல வழி வகை செய்யும். இந்த சிகிச்சை முறை எளிதானது. காலையில் வந்தால் மதியம் வீட்டுக்கு சென்று விடலாம். 3 அடைப்புகள் இருந்தால் கூட ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை பெறலாம். 


ஆனால் அனைவருக்கும் இந்த ஸ்டென்ட் சிகிச்சை செய்ய முடியாது. சிலருக்கு ஸ்டென்ட் வைப்பதில் சிக்கல் இருக்கும். அவர்களுக்கு திறந்த நிலை பைபாஸ் அறுவை சிகிச்சை தான் பயன் அளிக்கும். பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது பரவலாக பேசப்படும் வார்த்தை போல் மாறி விட்டது. 


அதற்கு காரணம் அவ்வளவு பேருக்கு மாரடைப்பு வந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இந்த சிகிச்சை முறையில் நெஞ்சு பகுதி எலும்புகளை துண்டித்து திறப்பார்கள். அப்போது இதயம் துடிப்பது நன்றாக தெரியும். என்ஜின் நன்றாக ஓட வேண்டும் என்றால் என்ஜினை நிறுத்தி பிஸ்டன் மாற்ற வேண்டும். அதேபோல இதயத்தை 45 நிமிடங்கள் நிறுத்தி கெட்டுப் போன வால்வை மாற்றலாம். 


இல்லையென்றால் அடைபட்ட குழாய்க்கு பைபாஸ் செய்யலாம். ரத்தம் ஒரு வழியாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வழியில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் மற்றொரு வழியாக இணைப்பு கொடுத்து ரத்தம் சீராக செல்ல வழி வகை செய்வது பைபாஸ் அறுவை சிகிச்சை. உதாரணத்துக்கு காரில் செல்கிறோம், போக்குவரத்து நெரிசல் காரணமாக மாற்றுப்பாதை வழியாக சென்று வேறொரு இடத்தில் மீண்டும் மெயின் ரோட்டை அடையச் சொல்வார்கள். அதேபோலத்தான் மாற்றுப்பாதை வழியாக மெயின் ரத்தக்குழாய்க்கு இணைப்பு கொடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்குவார்கள். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான் இதயம் நன்றாக இயங்கும். 


அறுவை சிகிச்சையின் போது நம் காலில் இருக்கும் ரத்தக்குழாயை எடுத்து இணைப்பு கொடுப்பார்கள். ஊருக்குள் வந்தால் போக்குவரத்து நெருக்கடி, வேறு வழியாக சென்றால் விரைவில் இலக்கை அடைந்து விடலாம். அதே போல தான் பைபாஸ் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு இதயத்தை நிறுத்த வேண்டும். எலும்புகள் துண்டிக்கப்பட வேண்டும். ஆஸ்பத்திரியில் 8 நாட்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு சென்ற பின்பு 2 மாதத்துக்கு வேலைக்கு செல்ல முடியாது. 


காரணம் துண்டிக்கப்பட்ட எலும்புகள் கூடுவதற்கு 2 மாதங்கள் ஆகும். இவ்வளவு கஷ்டம் இல்லாமல் எளிதில் செய்யப்படக் கூடிய நவீன அறுவை சிகிச்சையும் உள்ளது. அதன் பெயர் சிறுதுளை சிகிச்சை. லேபராஸ்கோபி மூலம் உடலில் சிறுதுளைகளிட்டு கர்ப்ப பை, பித்தப்பை, அப்பெண்டிஸ் அகற்றப்படுவது போல இதய அறுவை சிகிச்சை செய்வது சிறுதுளை சிகிச்சை. 


இந்த சிகிச்சையில் வலது புற மார்புக்கு கீழ் உள்ள விலா எலும்புகளுக்கு இடையில் ஒரு சிறு துளை இடப்பட்டு நவீன கருவிகளை கொண்டு இதய துடிப்பை நிறுத்தாமலேயே சிறுதுளை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முறை இந்தியாவுக்கு வந்து 5 ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தால் நோயாளிகள் 3 அல்லது 4 நாட்களில் வீட்டுக்கு சென்று விடலாம். 


8 நாளில் வேலைக்கே போகலாம். இதில் எலும்புகள் துண்டிக்கப்படுவதோ, பாதிக்கப்படுவதோ இல்லை. 2 எலும்புகளுக்கு இடையே தசை பகுதியில் துளையிட்டு தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. டாக்டரை பொருத்தவரை சிறுதுளை சிகிச்சை மிகவும் சிரமமானது. சின்ன துவாரம் வழியாக பார்த்து, பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கோ மிகவும் எளிமையான சிகிச்சை. நோயாளிகளும் இந்த எளிய சிகிச்சை முறைகளையே விரும்புகிறார்கள். 


சாதாரணமாக செய்யக்கூடிய பைபாஸ் அறுவை சிகிச்சையில் இருந்து 10 சதவீதம் தான் இதற்கு கூடுதல் செலவாகும். சிறுதுளை சிகிச்சையில் ஒன்றல்ல, மூன்று ரத்தக்குழாய் அடைப்புகள் இருந்தாலும் சரி செய்து விடலாம். வால்வில் பாதிப்பு இருந்தால் 2 வால்வு கூட மாற்றலாம். இந்தியாவில் இதுபோன்ற நவீன இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்கள் 25 பேர் தான் உள்ளனர். தமிழகத்திலும் சிறுதுளை சிகிச்சை செய்யக்கூடிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். 


குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக சொல்வார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த சிகிச்சை முறை பலன் அளிக்கும். இந்த முறையில் குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இதய குறைபாடுகளை சரி செய்ய முடியும். சிறுதுளை சிகிச்சைக்கு பின்னர் வலி இருக்காது. தழும்பு பெரிய அளவில் இருக்காது. தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு, ரத்த இழப்பு மிகவும் குறைவு. தங்களது இயல்பு வாழ்க்கைக்கு விரைவிலேயே திரும்பி விடலாம். 


வயதானவர்கள், புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை செய்வது சற்று சிக்கலானது. ஆனால் சிறுதுளை முறையில் சிக்கல் ஏற்படாது. சிறுதுளை அறுவை சிகிச்சை மூலம் பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை அல்லது வால்வை பழுது பார்ப்பது ஆகியவற்றையும் சரி செய்யலாம். 


இந்த சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது. இதனால் பைபாஸ் அறுவை சிகிச்சை என்றதும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. இப்போது 100 அறுவை சிகிச்சைகளில் 99 சதவீதம் வெற்றியாகவே அமைகிறது. அந்த அளவுக்கு அறிவியல் நுட்பம் வளர்ந்து விட்டது. முன்பெல்லாம் இதய அறுவை சிகிச்சைக்கு 6 மணி முதல் 7 மணி நேரம் ஆகும். இப்போது 3 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. கடைபிடிக்க வேண்டியவை இதய அறுவை சிகிச்சை செய்ததுடன் இருந்து விடக்கூடாது. 


அறுவை சிகிச்சைக்கு பின்பு மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் செல்வது முக்கியம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை பரிசோதனை செய்து கட்டுக்குள் வைக்க வேண்டும்.அறுவை சிகிச்சைக்கு பிறகு நிச்சயம் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், 


குறைந்தது 3 அல்லது 4 கிலோமீட்டர் தினசரி நடைபயணம் மேற்கொள்ளவேண்டும். 


காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொண்டு அசைவ உணவு, எண்ணை பதார்த்தம், இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. வெளி உணவை தவிர்த்து, வீட்டு உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், கோபம், சண்டையிடுவதை தவிர்த்து, தியானம், யோகா செய்வது நன்மை தரும். 


மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் முறைகளை கையாளுவது முக்கியமானது. மேலும், தூக்கமின்மைக்கு முக்கிய காரணமான மன உளைச்சலை தவிர்த்து விட்டாலே உறக்கம் வரும். தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தொலைபேசி, டி.வி. ஆகியவற்றை பார்க்காமல், நீண்ட நேரம் விழித்து இருக்காமல் சீக்கிரம் தூங்க வேண்டும். நல்ல தூக்கம் இருந்தால் ஆயுள் நீண்டு இருக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent