இந்த வலைப்பதிவில் தேடு

ஊரகத் திறனாய்வு தேர்வு எப்போது?

சனி, 16 நவம்பர், 2024

 



பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதியை அறிவித்த தேர்வுத்துறை


தமிழகத்தில் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (சென்னை தவிர்த்து) அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;


தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர்.


இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும். இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்களின் தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக நவம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் நவம்பர் 14-ம் தேதி முதல் 22-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 


அதன்பின் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent