இந்த வலைப்பதிவில் தேடு

38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026




தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் ரொக்கமாகவும், ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும் கணக்கில் வராத ஒரு கோடியே 18 லட்சத்து 14,608 ரூபாய் சிக்கியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 27) திடீர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள், மின்சாரத்துறை மற்றும் பிற அரசு துறை அலுவலகங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதிரடி சோதனை

சென்னையில் கிண்டியிலுள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகம், பல்லவரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது. அதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம், திருவண்ணாமலை ஆரணி நகராட்சி அலுவலகம், திருப்பத்தூர் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், தென்காசி கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.

மேலும், திருநெல்வேலி சார்பதிவாளர் அலுவலகம், மருந்துகள் துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஜி-பேவில் அதிக பணம்

சோதனையின்போது அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள், ரொக்கப் பணம் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், பல்வேறு அலுவலங்களிலிருந்து ரூ. 28 லட்சத்து 24 ஆயிரத்து 945 கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் ஜி-பே மூலமாக ரூ. 89 லட்சத்து 89 ஆயிரத்து 663 மதிப்பிலான பரிவர்த்தனைகள் என மொத்தம் ஒரு கோடியே 18 லட்சத்து 14 ஆயிரத்து 608 ரூபாய் கணக்கில் காட்டப்படாதது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.`


குறிப்பாக, சென்னை கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ. 31 லட்சத்து 52 ஆயிரத்து 661, திருச்சி தென்னூர் மின் பராமரிப்பு அலுவலகத்தில் ரூ. 13 லட்சத்து 58 ஆயிரம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.7 லட்சத்து 24 ஆயிரத்து 500 உள்ளிட்ட அதிக மதிப்பிலான ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதேபோன்று, நீலகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்து 85 ஆயிரத்து 900, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 300 ரூபாய் உள்ளிட்ட ரொக்கப் பணமும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரே நாளில் நடைபெற்ற சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் கண்டறியப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் பணம் பெறப்பட்டதற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, 38 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற இந்த ஒரு நாள் சோதனை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent