பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக்கூடாது என்றும், 'சிறப்புக் குழந்தைகள் இந்தப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும், தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி சட்டம் 16, 17 பிரிவுகள், எந்த ஒரு கல்வி நிறுவனமும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க மறுக்கக்கூடாது என வலியுறுத்துகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் உள்ளடக்கிய கல்வியை உறுதி செய்யும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகள், பிற குழந்தைகளுடன் இணைந்து கற்பதை உள்ளடக்கிய கல்வி திட்டம் வலியுறுத்துகிறது. இருப்பினும், சில பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகளை சேர்த்துக் கொள்ள தலைமையாசிரியர்கள் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக் கொள்வதை உறுதி செய்ய, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அறிவிப்பு பலகை வைக்க தொடக்கக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மார்ச் முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளிகளில், 'ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என்ற அறிவிப்புப் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக