திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த, மணலியை சேர்ந்தவர் வசந்தி, 55. நாகை, தெத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியை.
இவர், பணிபுரிந்த பள்ளியில், மாணவர்களை தாயுள்ளத்தோடு அரவணைத்து, அன்பு காட்டி வந்தார். வறுமையால் பள்ளிக்கு வர இயலாத குழந்தைகளை தேடிச்சென்று, அக்குழந்தைகளின் பெற்றோருக்கு தன் ஊதியத்தில் இருந்து பொருளாதார உதவிகள் செய்து, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தார்.
இதனால், தெத்தி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள், வசந்தி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். வசந்தி மகள் நந்தினி, அரசு பணிக்கான போட்டி தேர்வில் வெற்றி பெற முடியாததால், மே, 19ம் தேதி, வீட்டில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பை தாங்க முடியாத வசந்தி, ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வசந்தி, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவரது மறைவு செய்தி கேட்டு, தெத்தி ஊராட்சியை சேர்ந்த, 10 கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தெத்தி கிராமத்திற்கு வசந்தி உடலை கொண்டு வந்து, 10 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தி, சகல மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இந்நிகழ்வு, கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக