இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களுக்குள் கருத்து வேறுபாடு - அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

செவ்வாய், 23 ஜூன், 2026




தலைமையாசிரியர் விஜயலட்சுமிக்கும், ஆசிரியர் திருப்பதிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தாமல் இருந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

பிள்ளைகளின் படிப்பில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறி அரசுப் பள்ளிக்கு பெற்றோர்கள் பூட்டுப் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டு 240 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்துள்ளனர். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துமாறு அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர்கள் இதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நடப்பு கல்வியாண்டில் இப்பள்ளியில் மொத்தமாக 160 மாணவர்களே இருந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று மாணவர்களின் பெற்றோர்கள் நூற்றுக்கணக்கில் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் 9 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதாக கூறிய அவர்கள், தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மாணவர் சேர்க்கையில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும், இங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒருகாலத்தில், வெளியூரில் இருந்து வந்து இந்த பள்ளியில் மாணவர்கள் பயின்று வந்ததாகவும், ஆனால் தற்போது உள்ளூர் மாணவர்களே இப்பள்ளியில் சேருவதில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தனர்.

எனவே, இத்தனைக்கும் காரணமான இப்பள்ளியின் தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி பெற்றோர்கள் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் கேட்டை மூடி பூட்டுப் போட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் உதயசங்கர், மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மேலும், பெற்றோர்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் உதயசங்கரிடம் நாம் கேட்டபோது, "ஆசிரியர் திருப்பதி, தலைமையாசிரியர் விஜயலட்சுமி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதால், மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தற்போது பெற்றோர் - ஆசிரியர் சங்கம் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் விசாரணையை தொடங்கியுள்ளோம்.

அவர்கள் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால், விரைவில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent