தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் சாப்பாட்டுக்கு, 300 ரூபாய் கட்டாய வசூல் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச் சாவடிகளில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். ஓட்டுச் சாவடிக்கு நிலை அலுவலர் மற்றும் மூன்று அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் சாப்பாட்டுக்கு, 300 ரூபாய் வசூலிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலருக்கு 3,000 ரூபாயும், மற்றவர்களுக்கு 2,600 ரூபாயும் ஊதியமாக வழங்கப்பட்டது. துாத்துக்குடி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் உள்ள 1,868 ஓட்டுச்சாவடிகளுக்கு 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பணி ஒதுக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் ரிசர்வ் பணியில் வைக்கப்பட்டனர்.
பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக்கான உணவை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. கேட்டுக் கொண்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் தாசில்தார் ஒருவர் கண்காணிப்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்தனர்.
ஆனால், மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவரிடமும் சாப்பாட்டுச் செலவு என்ற பெயரில் கட்டாயமாக 300 ரூபாய் வசூல் செய்தனர். காலையில் நான்கு இட்லியும், மதியம் தக்காளி சாதம், சாம்பார் சாதம் வழங்கப்பட்டன.
தரமில்லா அவ்வுணவை சாப்பிட முடியவில்லை. பணி முடிந்ததும் எங்களுக்கு தந்த தொகையில் இருந்து 300 ரூபாயை கட்டாயமாக பிடித்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில இடங்களில் , 110 ரூபாய் வசூல் செய்துள்ளனர்.
துாத்துக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியில் ஓட்டுச் சாவடியில் இருந்தவர்கள், ரிசர்வ் பணியில் இருந்தவர்களிடம் கட்டாயமாக 300 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக